

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் எந்தஅளவுக்கு மக்களை சென்றடைந்துள்ளன என்று ஆய்வு செய்ய, தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் பெயருக்காக இருக்கக்கூடிய சில அரசியல் கட்சிகள், தேசவிரோத செயல்களில்தான் அவர்களது பாதி நேரத்தை செலவழிக்கின்றன.
சட்டம் - ஒழுங்கு பாதிப்பு: அந்த வகையில், ஓர் அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, மேகாலயாவில் நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் ராணுவ வீரரை ஒருவர் தொலைபேசியில் மிரட்டுகிறார். பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரை, அவரது குடும்பத்தை வைத்து மிரட்டி, அச்சுறுத்திப் பேசும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் இருக்கிறோம், அதனால் தன்னை யாரும்எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்த வீரரை தொடர்பு கொண்டு பேசினேன். எந்த உதவியாக இருந்தாலும், பாஜக தங்களுக்கு செய்யும் என அவரிடம் உறுதிகூறினேன். ஆர்.எஸ்.பாரதி குறித்து பேசி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டமிடலை ஆரம்பித்துள்ளோம். அனைத்து கிராமங்களுக்கும் சென்று, மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதை பார்க்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் திமுக மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பால் விலை உயர்வைக் கண்டித்து அடுத்தகட்டமாக 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.