

பழநி: விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சீசனை முன்னிட்டு தினமும் அதிக அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநிலபக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
பக்தர்கள் 2 மணி நேரம் வரைகாத்திருந்து ரோப் கார், வின்ச்ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றனர். மலைக் கோயிலில் கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசையில் 3 மணி நேரம்வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரி, சந்நிதிவீதிகளில் அணிவகுத்து நின்றவாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 4 விடுதிகள் மற்றும்தனியார் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர்.
பழநி கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.35-க்கும்,டின் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மலைக் கோயில் மற்றும் கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு பழநிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சிலநாட்களாக அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தம் விற்பனையானது. தற்போது தினமும் 1.50 லட்சம் டப்பா பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது.