

பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு 29 ஆயிரத்து 115 கோடி ரூபாய் டெபாசிட் தொகை பெறப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எம்.கே.ஜெயின் கூறியதாவது:
மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்ட பிறகு கடந்த 16-ம் தேதி வரை இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 கோடியே 11 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 10 ஆயிரத்து 986 கோடி வழங்கியுள்ளது. இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் அல்லாத மற்றவர்களுக்கு 456 கோடி ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்துள்ளது. மேலும், 1 கோடியே 17 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் 29 ஆயிரத்து 115 கோடி ரூபாய் டெபாசிட் தொகை பெறப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி ஏடிஎம்கள் மூலம் 59 லட்சத்து 57 ஆயிரம் பரிவர்த்தனைகள் மூலம் ஆயிரத்து 130 கோடி ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக 99 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்கு வசதியாக மூத்தக் குடிமக்கள், பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டது. அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக 4 ஆயிரத்து 973 சிறப்பு முகாம்கள் நடத்தி 96 ஆயிரம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் விஷயத்தில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதையும் மீறி ஊழியர்கள் ஏதாவது முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஜெயின் தெரிவித்துள்ளார்.