

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காற்று மாசு என்பது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது மனிதர்களின் உடல் நலம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதிப்பதாக உள்ளது. உயிரினங்களுக்கு உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு காற்றும் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை என்பதுதான் உண்மை.
தொழிற்சாலைகள், வாகனங்களால் வெளியாகும் புகை, சாலைகளில் பறக்கும் புழுதிக் காற்று என திரும்பும் திசையெல்லாம் மாசடைந்த காற்றையே நாம் சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரில் முதியோர், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். இதயம், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டோர் இந்த மாசடைந்த காற்றால் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர். உலகில் எந்த ஒரு உயிரினமும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ வேண்டுமெனில் நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். காற்று மாசின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு இது.