

சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்கு மருத்துவர்கள் காரணமல்ல என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாடை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரைவயது சிறுவன் உயிரிழந்ததால், பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், சிறுவன்அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெற்றோர் அனுமதியுடன் மயக்க மருந்து செலுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறுவன் மயக்க நிலையிலேயே இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "எழும்பூர் மருத்துவமனைக்கு வந்ததால் குழந்தை இறந்ததாக சொல்வது தவறானது. அந்த குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் ஆகிறது. சிறிய தாடை, பெரிய நாக்குடன் 4 ஆண்டுகளாக குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நாக்கால் மூச்சு விடுவதில் பிரச்சினை. குழந்தைக்கு அறுவை சிகிச்சைகூட செய்யவில்லை. ஸ்கேன் மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவனுக்கு இரங்கல் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,“கடந்த 15-ம் தேதி இளம் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்தைத் தொடர்ந்து, தற்போது இக்குழந்தை வரையிலான மருத்துவர்களின் அலட்சியமானசிகிச்சைகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் காரணமாக, மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் மருத்துவர்களின் மீதும் உள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி வருகிறது. வரும் காலங்களில் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்ய வலியுறுத்துவதோடு, உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.