

மதுரை: வட கிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த மாதம் கிலோ ரூ.100 வரை விற்ற தக்காளி தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் மார்க்கெட்டில் தினமும் 100 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வரும். தற்போது 200 டன் வருகிறது. பறவை மொத்த கொள்முதல் மார்க்கெட்டுக்கு 1000 டன் காய்கறிகள் வருகின்றன. அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.10, கத்திரி ரூ.25, புடலை ரூ.20, சீனிவரக்காய் ரூ.20, சுரக்காய் ரூ.15, பீன்ஸ் முருங்கை ரூ.30, அவரை ரூ.25, கேரட் ரூ.20, பீட்ரூட் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, வெண்டைக்காய் ரூ.10 என விற்பனையாகிறது. விலை மலிவால் மக்கள், சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவு காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். அதேநேரம் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் தேக்கமடைந்து தினமும் 5 டன் வரை குப்பைக்கு செல்கின்றன.
மாட்டுத்தாவணி மார்க்கெட் காய்கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் காசிமாயன் கூறியதாவது: பொதுவாக நவம்பர் மாதம் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்துவிட்டது. வெண்டைக்காய் பறிப்பதற்கு கூலியாட்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 ஊதியம் வழங்குகிறார்கள். தற்போது வெண்டைக்காய் கிலோ ரூ.5 முதல் 8-க்கு விற்பதால் பறிப்பு கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
விளைச்சல் அதிகரிக்க காரணம் என்ன?
தோட்டக்கலைத் துறை அதிகரிகள் கூறியதாவது: பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளதால் காய்கறிகள் சாகுபடிக்கு தண்ணீர் பாசனம் எளிமையாகிவிட்டது. தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மாடி வீட்டு தோட்டத்தில் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதுவே காய்கறிகள் விளைச்சல் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்றனர்.