

ஈரோடு: தமிழக அரசியலில், இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பதை இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு இருக்கிறது என ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்புகின்றனர்.
அப்பாவி இந்துக்களை அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் பயன்படுத்துகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கின்றனர். தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் முயற்சி எடுபடாது.
திமுக தலைமையிலான கூட்டணி தான் இங்கு கூட்டணியாக இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலுடன் கலைந்து விட்டது. மின் இணைப்பை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஜி 20 மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள கருத்து பகிர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும், என்றார்.