Published : 04 Dec 2016 06:52 PM
Last Updated : 04 Dec 2016 06:52 PM

உடற்பயிற்சி முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார்; ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்று செயல்படுவார்: பொன்னையன்

உடற்பயிற்சி முடிந்தவுடன் முதல்வர் உடனடியாக வீடு திரும்புவார். ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்று செயல்படுவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் முதல்வரின் உடல்நிலை பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''முதல்வருக்கு இருந்த நுரையீரல் தொற்று மற்றும் அதை ஒட்டி ஏற்பட்ட மற்ற தொய்வுகள் எல்லாம் முற்றிலும் குணமாகிவிட்டன. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, சிறப்பான சிகிச்சை அளித்ததால் முதல்வர் அனைத்து உபாதைகளில் இருந்தும் பூரண நலன் அடைந்துள்ளார். நன்கு பேசக்கூடிய அளவுக்கும், அவராகவே உணவு உண்ணும் அளவுக்கும் அதிகாரிகளுக்கு ஆணைகளை வழங்குவதிலும், அரசியல் ரீதியாக தேவையான முடிவுகளை இயக்கத்துக்கு தெரிவிப்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

முதல்வர் சிந்தனை தெளிவோடு இருக்கிறார். சிறந்த முறையில் வழிகாட்டுதல் தருகிறார். தொடர்ந்து 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த காரணத்தால், அவருக்கு ஏற்பட்ட அந்த தொய்வுகளில் இருந்து முற்றிலுமாக, பூரணமாக நலம் பெற்று பொதுப்பணிக்கு வர ஓய்வு தேவை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். உடற்பயிற்சி முழுமையாக முடிந்த உடன் எல்லாப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நிலையில் முதல்வர் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி முடிந்தவுடன் முதல்வர் உடனடியாக வீடு திரும்புவார். ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்று செயல்படுவார்'' என்று பொன்னையன் கூறியுள்ளார்.

(பொன்னையன்)

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சென்னை வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண் டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றனர். அதன்படி, அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தனி வார்டில் உள்ள முதல்வரைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர். பெண் பிசியோதெரபி நிபுணர் ஒருவரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வர் குணமடைந்துவிட்டார். அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வீட்டுக்கு செல்லலாம் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் ''உடற்பயிற்சி முடிந்தவுடன் முதல்வர் உடனடியாக வீடு திரும்புவார். ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்று செயல்படுவார்'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x