

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காருகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ்(60). இவர் உத்தனப்பள்ளி அருகே உள்ள பென்னிக்கல்லில் ஜல்லி கற்கள் உடைக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், சுரேகா என்ற மகளும், வினய் என்ற மகனும் உள்ளனர். மகனும், மகளும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். பாஜகவில் வர்த்தக அணி மாவட்டத் தலைவராக இருந்த முனிராஜ், பின்னர் திமுகவில் இணைந்தார்.
முனிராஜுக்கும், உப்பரத்த மண்டரப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ்(32), சீனிவாசன்(33) ஆகியோருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. நேற்று காலை தனது ஜல்லி உடைக்கும் நிறுவனத்தில் முனிராஜ் இருந்தபோது நாகராஜ், சீனிவாசன் ஆகியோர் அங்கு வந்து முனிராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அறை கதவைப் பூட்டிச் சென்றுள்ளனர். பின்னர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வீச்சரிவாளுடன் உத்தனப்பள்ளி காவல் நிலையத்துக்கு சென்ற 2 பேரும் போலீஸாரிடம் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் நாகராஜ், சீனிவாசன் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், சீனிவாசனின் வீட்டுக்குள் புகுந்த முனிராஜின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட் டோர், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதை யடுத்து, சீனிவாசன், நாகராஜ் ஆகியோரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.