தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே ரேஷன் கடையில் அரிசி கள்ள விற்பனை

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே ரேஷன் கடையில் அரிசி கள்ள விற்பனை
Updated on
2 min read

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள ரேஷன் கடையில் அரிசி கள்ளத்தனமாக விற்கப் படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நீச்சல் குளம் எதிரில் உள்ள கட்டியங்கார தெருவில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கார்டுதாரர்களுக்கு வழங்காமல் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்கள் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கேட்டு வரிசையில் காத்திருந்தனர். ஆனால், கடையின் விற்பனையாளர் சின்னப்பையன் கடையைத் திறந்த சற்று நேரத்தில் எடை இயந்திரம் பழுதாகி விட்டதாகக் கூறி கடையை பூட்டிச் சென்றார். இதனால் பொருட்கள் வாங்க காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பூட்டிச் சென்ற 2 மணி நேரத்திற்கு பிறகு விற்பனையாளர் கடையை திறந்து சில மூட்டை அரிசியை சிலருக்கு கள்ளத்தனமாக கொடுத்து அனுப்பினார். இதை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் உணவு இடைவேளைக்கு பிறகு கடை திறக்கப்படும் நேரத்தில் கடையின் முன்பு பொருட்கள் வாங்க திரண்டனர். ஆனால், விற்பனையாளர் கடையில் அரிசி இருப்பு இல்லை எனக் கூறினார். இதனால், கார்டுதாரர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் நீச்சல் குளம் எதிரில் தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர், தருமபுரி வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்ட மக்கள், கடையின் விற்பனையாளர் தொடர்ந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை பதுக்கல் நபர்களுக்கு கள்ளத்தனமாக விற்று வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என புகார் கூறினர்.

அப்போது அதிகாரிகள், ‘பொருட்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படும்போதே தகவல் அளித்திருக்கலாமே’ என்று கேட்டனர். அதற்கு அப்பகுதி மக்கள், அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகக் கூறி அருகிலுள்ள தெருவுக்கு அழைத்து சென்றனர். பிரபாகரன்-குமுதா தம்பதியரின் வீட்டிற்குள் அரிசி இருப்பதாகக் கூறி சோதனையிட வலியுறுத்தினர். அதிகாரிகள் வீட்டில் நுழைந்து சோதனையிட்டபோது சுமார் 120 கிலோ ரேஷன் அரிசி 4 சிப்பங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே அந்த அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் சரவணன் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் ரேஷன் கடை மற்றும் பதுக்கல் அரிசி இருந்த வீடு ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர். ரேஷன் கடை விற்பனையாளர் மீதான நடவடிக்கை குறித்து துணைப் பதிவாளர் சரவணனிடம் கேட்டபோது, ‘விற்பனையாளர் சின்னப்பையன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அரிசியை பதுக்கி வைத்தவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in