

காசிமேட்டில் மீனவர் ஒருவரை 6 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரபு (35). மீனவர். இவர் மீது காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி வழக்கு கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வார்ப்பு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண் டிருந்தார் பிரபு. அப்போது வந்த ஒரு ஆட்டோவில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தியுடன் பிரபுவை நோக்கி ஓடிவந்தனர்.
தன்னை வெட்ட வருவதை உணர்ந்த பிரபு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் பிரபுவை விரட்டி சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, மார்பு, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் ஆய்வாளர் சரவணபிரபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரபு உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரபுவுக்கும், திருவொற்றி யூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கார்த்திக்கை பிரபு தாக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் சேர்ந்து பிரபுவை கொலை செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.