Published : 08 Jul 2014 09:51 AM
Last Updated : 08 Jul 2014 09:51 AM

திருமாவளவன் கட்சியினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்: டிஜிபியிடம் இளம்பெண் புகார்

என்னையும், எனது குழந்தை யையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் கணபதி யைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் டிஜிபி ராமானுஜத்தை திங்கள்கிழமை மாலை சென்னையில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்தார். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். அவரை நம்பி எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்நிலை யில், சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன்.

திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்த நேரத்தில் எனக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்தை ஜெயந்தி, கார்த்திக் ஆகியோருக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தேன். ஜெயந்தியும், கார்த்திக்கும் நகைக்கடை நடத்துவதாகவும், தற்போது பணத்துக்கு பிரச்சினை இருப்பதால், சில நாட்கள் கழித்து முழு தொகையையும் கொடுப்பதாகவும் கூறினர். இதை நம்பி நானும் எழுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் என்னை மிரட்டுகின்றனர்.

திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு இரு நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது, ‘திருமாவளவனுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொத்துக்கான முழு தொகையையும் பெற்றுக் கொண்டேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி மிரட்டினார். இதற்கு மறுத்ததால் என்னையும், எனது 4 வயது பெண் குழந்தை யையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். மேலும் ஜெயந்தி, கார்த்திக், சந்துரு, விஜயகுமார், ரேகா, சீனிவாசன் ஆகியோரும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

திருமாவளவனை நம்பி எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். அவரது கட்சியினரை நம்பி எனது சொத்துக்களை இழந்துவிட்டேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். எனவே, எனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வன்னியரசு விளக்கம்

புகார் தொடர்பாக வன்னி யரசு கூறியதாவது: எங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் பொய்யானது. மனநலம் பாதிக்கப் பட்டதால் அந்தப் பெண் இப்படி பேசுகிறார். கடந்த ஆண்டுகூட இது போன்ற பொய்ப் புகாரை அளித்திருந்தார். அதில் உண்மை இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணுக்கும் தலைவருக்கும் (திருமாவளவன்) பெரிய அளவில் பரிச்சயம் இல்லை. ஒரு விழாவில் ஒரேயொரு முறை அவரைப் பார்த்திருக்கிறார். அந்த பெண் ஒருவருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிட்டார். அதற்கு இப்போது கூடுதல் தொகை கேட்டு வருகிறாராம். இவ்வாறு வன்னியரசு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x