

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை களையும் பொருட்டு,குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக சென்னை, மயிலாப்பூர் மண்டலத்தில் சிருங்கேரி மடம் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற நுகர்வோர் குறைதீர் முகாமில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்துகொண்டார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை களையும் பொருட்டு, தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக, ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமையன்று குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்து தாலுகா மற்றும் சென்னை நகர மண்டலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரிமாற்றம் மற்றும் உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டைகோரும் விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முகாம் நடைபெறும் நாட்களில் மதியம் 1 மணிவரை பெறப்படும் மனுக்கள் மீது அன்று மாலைக்குள் தீர்வு காணப்படுகிறது.
தமிழகத்தில் இன்று வரை, 5 லட்சத்து 56 ஆயிரத்து 948 மனுக்கள்பெறப்பட்டு, 5 லட்சத்து 35 ஆயிரத்து 972 மனுக்கள் மீது அன்றையதினமே தீர்வு காணப்பட்டுள்ளது. இவற்றுள் சென்னை மாநகரில் மட்டும் செயல்படும் 17 மண்டலங்களில் 96 ஆயிரத்து 755 மனுக்கள் பெறப்பட்டதில் 85 ஆயிரத்து 980 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.