

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களை வரும் 31-க்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, இந்த ரூபாய் நோட்டுக்களை வரும் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து வங்கிகளில் கூட்டம் அலைமோது கிறது.
இந்நிலையில் பலர், கோயில்களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோயில்களின் உண்டியல்களில் அதிக மதிப்பிலான கருப்பு பணமும் காணிக்கையாக செலுத்தப்பட்டன.
டிசம்பர் 31-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், கோயில் உண்டியல்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காணிக் கையாக செலுத்திய செல்லாத நோட்டு களை மாற்றுவதற்காக இந்நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது, ‘கோயில் களின் உண்டியல்களை டிசம்பர் 25-ம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த எந்த பிரச்சினையும் இருக்காது. அதற்கு பிறகு உண்டியலில் விழும் பழைய ரூபாய் நோட்டுகளை இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று ரிசர்வ் வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில் ஒன்றின் செயல் அலுவலரிடம் கேட்டபோது, ‘டிச.31-க்குள் கோயில் உண்டியலை திறக்க வேண்டும் என்று தனியான உத்தரவு எதையும் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்கவில்லை. ஆனால் புத்தாண்டு வருவதால் அன்றைய தினம் கோயில்களுக்கு அதிக பக்தர்கள் வருவர். அதனால் பெரும்பாலான கோயில்களில் டிச.31-க் குள் உண்டியல்கள் திறக்கப்பட்டுவிடும்’ என்றார்.