

கரூர் மாவட்டம் வெங்கமேடுவைச் சேர்ந்த ஜான் அற்புதராஜ், கரூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “4 பேர் என்னை மிரட்டி, ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராம்ஜி நகர் போலீஸார் கூறியதாவது:
புஷ்பராஜா என்பவரின் நண்பர் ஒருவர், ஜான் அற்புதராஜை செல்போனில் தொடர்புகொண்டு, தனக்குத் தெர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சத்துக்கு புதிய ரூபாய் நோட்டுகள் தேவைப் படுவதாகவும், இதற்கு கமிஷனாக 35 சதவீதம் தரப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை, காவல் துறையில் பணியாற்றும் பாபு, ஜெயப்பிரகாஷ், ஊர்க்காவல் படை வீரர் ஆனந்த் ஆகியோரிடம் புஷ்பராஜா தெரிவித்தார்.
இதையடுத்து, ராம்ஜி நகர் அருகே ரோந்து வருவதுபோல காவலர்கள் பாபு, ஜெயப் பிரகாஷ் ஆகியோர் வந்து, புஷ்ப ராஜாவுடன் பேசிக்கொண்டிருந்த ஜான் அற்புதராஜிடம் ரூ.6.5 லட்சத்துக்கான புதிய ரூபாய் நோட்டுகள் இருந்ததை அறிந்து கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதியாமல் இருக்க ரூ.3 லட்சம் வேண்டும் என மிரட்டி அந்த தொகையை பறித்துக் கொண்டு, 3 லட்சத்தை போலீஸாரும், புஷ்ப ராஜாவும் பங்கிட்டுக் கொண்டுள் ளனர். இதுகுறித்து ராம்ஜி நகர் போலீஸில் ஜான் அற்புதராஜ் புகார் செய்தார். அதன்பேரில் நடத்திய விசாரணையில்தான், போலீஸாருடன் சேர்ந்து புஷ்ப ராஜா நடத்திய நாடகம் தெரிய வந்தது. எனவே, 4 பேரையும் கைது செய்துள்ளோம்” என்றனர்.