சென்னை: சிரமங்களுக்கிடையே மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிரமங்களுக்கிடையே மாநகர பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

புயல் காற்றால் மாநகர பேருந்துகளை ஓட்டுநர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே இயக்கினர்.

வார்தா புயல் காரணமாக வழக்கத்தைவிட குறைவாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இயக்கப்பட்டன.

புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி சென்னை புறநகரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்திருந்தன. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தியிருந்தன.

பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னை மாநகரமே போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் பயணிகள் இல்லாமல் பெரும்பாலான பேருந்துகளில் கூட்டம் இல்லை.

புயல் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், மழை காரணமாகவும் பேருந்துகளை மிகுந்த சிரமத்துடனே ஓட்டுநர்கள் இயக்கினர். புயல் காற்றால் சில பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

பல இடங்களில் சாலைகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், மரக்கிளைகள் விழுந்ததாலும் பேருந்து போக்குவரத்தில் ஆங்காங்கே தடங்கல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in