உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல் 2018-ல் கட்டி முடிக்கப்படும்: ரியர் அட்மிரல் சுரேந்திர அகுஜா தகவல்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல் 2018-ல் கட்டி முடிக்கப்படும்: ரியர் அட்மிரல் சுரேந்திர அகுஜா தகவல்
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் 87-வது ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், 11 கடற்படை, 5 கடலோர காவல் படையைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புத் துறையின் போர்க் கப்பல் தயாரிப்புப் பிரிவின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி ரியர் அட்மிரல் சுரேந்திர அகுஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், பயிற்சியில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ரியர் அட்மிரல் சுரேந்திர அகுஜா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். கேரள ஆளுநரின் சுழற்கோப்பையை லெப்டினன்ட் ரிஷப் தத்தாவும், பயிற்சியில் ஒட்டுமொத்த அளவில் சிறப்பிடம் பெற்ற கிழக்கு கடற்படை தளபதியின் சுழற்கோப்பையை லெப்டினட் கிரணும் பெற்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ரியர் அட்மிரல் சுரேந்திர அகுஜா கூறும்போது, ‘‘உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் கட்டுமானப் பணி கொச்சியில் நடைபெறுகிறது. இந்தப் பணி 2018-ம் ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பலில் 30 விமானங்களை நிறுத்த முடியும்.

இரண்டாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை 65 ஆயிரம் டன் எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும் ஹெலிகாப்டர், விமானங்கள் என மொத்தம் 54 போர் விமானங்களை கொண்டுசெல்லும் வகையிலும் கட்டமைக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in