

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் 20,489 பேர் பட்டம் பெற்றனர்.தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநரும், பல் கலைக்கழகத்தின் துணைவேந்தரு மான சி.எச்.வித்யாசாகர் ராவ் விழா வுக்கு தலைமைத் தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலைக் கழகத்தின் இணைவேந் தருமான சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.கீதா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் தலைமை இயக்குநர் ஜெகதீஷ் பிரசாத் பட்ட மளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மருத் துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி), மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு நேரடியாக 5,266 பேர், மற்ற வகையில் 15,223 பேர் என மொத்தம் 20,489 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 141 மாணவ, மாணவிகள் 92 தங்கம், 20 வெள்ளி உட்பட மொத்தம் 181 பதக்கங்களை பெற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த கே.பாவனா 5 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தார். வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் எம்டி (பொது மருத்துவம்) படித்த கே.அதிதி 3 தங்கம், 2 வெள்ளியும் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்லூரியில் எம்எஸ் (பொது அறுவைச் சிகிச்சை) படித்த பி.மீனலோசனி 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றனர்.
அதிக பதக்கங்களை பெற்ற மாணவி கே.பாவனா கூறும்போது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மகப்பேறு மருத்துவத்தில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. அதனால், நான் அடுத்ததாக எம்டி மகப்பேறு மருத்துவம் படிக்க இருக்கிறேன்" என்றார்.
மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் தலைமை இயக்குநர் ஜெகதீஷ் பிரசாத், சென்னை அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் சிகிச்சைப் பிரிவு முன்னாள் இயக்குநர் ஆர்.ஜி.கோவர்தன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவ டாக்டர் விருது வழங்கப்பட்டது. மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், மூத்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரன், குளோபல் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.முகமது ரேலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழா முடிவில் மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் தலைமை இயக்குநர் ஜெகதீஷ் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.