Published : 27 Nov 2022 01:49 PM
Last Updated : 27 Nov 2022 01:49 PM

தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பு - கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வருவதால் விலை வீழ்ச்சி

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனினும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 3 1/2 லட்சம் ஹேக்டர் அளவில் காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வெங்காயம், தக்காளி, கேரெட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் உற்பத்தியும் குறைந்திருந்தது. மழையால் சாகுபடி செய்த காய்கறி செடிகளும், அதில் அறுவடைக்கு தயாரான காய்கறிகளும் அழுகின. அதனால், தக்காளி கிலோ ரூ.100, வெங்காயம் கிலோ ரூ.100 வரை தொட்டது. மற்ற காய்கறிகளும் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகின.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையில் காய்கறிகள் விளைச்சல் தமிழக்தில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பதால் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற தக்காளி தற்போது ரூ.10க்கு விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிகள் சந்தையில் ஒரு நாளைக்கு 100 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது 200 டன் வருகிறது. அதுபோல், பறவையில் உள்ள மொத்த கொள்முதல் சந்தைக்கு 1000 டன் காய்கறிகள் வருகின்றன. அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு செல்கின்றன.

காய்கறிகள் வரத்து மிகுதியால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.10, கத்திரி ரூ.25, புடலை ரூ.20, சீனி அவரைக்காய் ரூ.20, சுரக்காய் ரூ.15, பீன்ஸ் மற்றும் முருங்கை ரூ.30, அவரை ரூ.25, கேரட் ரூ.20 முதல் ரூ.30, பீட்ருட் ரூ.30, முட்டைகோஸ் ரூ.30, வெண்டைக்காய் ரூ.5 முதல் ரூ.10 வரை என விற்பனையாகிறது. காய்கறிகள் விலை மலிவால் மக்கள், சிறு - குறு வியாபாரிகள் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். அதேநேரத்தில் உற்பத்தி மிகுதியால் தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் தேக்கமடைந்து ஒரு நாளைக்கு 5 டன் வரை வீணாக குப்பைக்கு செல்கின்றன.

மாட்டுத்தாவணி மார்க்கெட் காய்கறிகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் காசிமாயன் கூறுகையில், ''பொதுவாக இந்த நவம்பர் மாத சீசனில் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்துவிட்டது. வெண்டைக்காய் விவசாயிகள் பாவம். கண்ணீ்ர வடிக்கிறார்கள். வெண்டைக்காய் உள்ளே பிடுங்குவதற்கு கூலியாட்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 ஊதியம் வழங்குகிறார்கள். வெண்டைக்காயை செடிக்குள்ளே போய் பறித்தால் கை, காலில் அரிப்பு எடுக்கும். ரத்தம் வரும். அதனால், இந்த வேலைக்கு பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள்.

ஆனால், தற்போது வெண்டைக்காய் கிலோ ரூ.5 முதல் 8க்கு விற்பதால் பறிப்பு கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை. தரமான முதல்தர கேரட் கூட ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே விற்கிறது. தெளிவான தக்காளி இந்த நேரத்தில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 க்கு விற்கும். ஆனால், முதல் தரம் தக்காளியே ரூ.15க்கு விற்கிறது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காய்றிகள் அழுகி வீணாவதைத் தடுக்க, அரசு குளிர்பதன கிடங்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

விளைச்சல் அதிகரிப்பிற்கு காரணம் என்ன? தோட்டக்கலைத்துறை அதிகரிகள் கூறுகையில், ''நடப்பாண்டு நல்ல மழை பெய்து, ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் வசதி அதிகரித்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளதால் காய்கறிகள் சாகுபடிக்கு தண்ணீர் பாசனம் எளிமையாகிவிட்டது. தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

மாடிவீட்டு தோட்டத்திலும் எளிய மக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டனர். மத்திய, மாநில அரசுகளும் ஏராளமான மானியங்கள் வழங்குகிறார்கள். மேலும், கரோனாவுக்கு பிறகு காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. அதனால், காய்கறிகள் தேவை அதிகரிப்பும், நல்ல விலையும், தண்ணீர் வசதி அதிகரிப்பும் தற்போது காய்கறிகள் விளைச்சலுக்கு முக்கிய காரணங்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகரிப்பதால் தற்காலிகமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது,'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x