

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(27-ம் தேதி) காலை கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், 25ம் தேதி இரவு பிடாரி அம்மன் மற்றும் 26ம் தேதி இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் இன்று(27-ம் தேதி) காலை 6.12 மணியளவில கொடியேற்றம் நடைபெற்றது.
தங்க கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். அப்போது, கோயிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகார என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதன் பிறகு பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.
மாட வீதியில் வெள்ளி விமானங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் அண்ணாமலையார், பராசத்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காலையில் பவனி வந்து அருள்பாலித்தனர். மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் இன்று (27-ம் தேதி) இரவு வலம் வர உள்ளனர். பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பித்தும் மற்றும் அர்ச்சனை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
டிசம்பர் 2ம் தேதி காலை 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளி தேரோட்டமும், டிசம்பர் 3ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
நாளைய (28-ம் தேதி) உற்சவம்: விநாயகர் உற்சவத்துடன், சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதியில் வலம் வர உள்ளார். இதேபோல், வெள்ளி இந்திர விமானங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் பஞ்ச மூர்த்திகள், மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர்.