Published : 27 Nov 2022 04:49 AM
Last Updated : 27 Nov 2022 04:49 AM

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு | நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் - முழு விவரம்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் உத்தரவிட்டது. மின் நுகர்வோர் அனைவரும் ஒரே நேரத்தில் மின் வாரிய இணையதளம் சென்று, தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின் வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும் நுகர்வோர் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து, மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசத்தை வழங்கி, மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரிய அலுவலகங்களில் நுகர்வோர் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராள மானோர் ஆதார் எண்ணை இணைக்க முயன்றதால், மின் வாரியத்தின் இணையதள சேவை முடங்கியது.

இதையடுத்து, ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை (நவ. 28) முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பண்டிகை நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், டிச. 31-ம் தேதி வரை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி மின் கட்டணம் செலுத்தலாம்.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

அதேபோல, கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x