Published : 27 Nov 2022 04:00 AM
Last Updated : 27 Nov 2022 04:00 AM
சென்னை: மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி இல்லாததால், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை பேரணி நடந்தது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியமனுவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலமாக அனுப்பவே இந்த பேரணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேரணியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் குணசேகரன், மாநில பொதுச் செயலாளர்கள் சாமி நடராஜன், மாசிலாமணி, சண்முகம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், தற்சார்பு விவசாயிகள் அமைப்பு சார்பாக கி.வே.பொன்னையன், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணி முடிந்த பிறகு, ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக சங்க நிர்வாகிகள் சென்றனர். ஆனால், ஆளுநர் மாளிகையில் மனுவை வாங்க மறுப்பு தெரிவித்ததால், கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு மறியலில்ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பொதுத் துறை செயலர் டி.ஜகந்நாதனிடம் மனு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT