Published : 27 Nov 2022 06:05 AM
Last Updated : 27 Nov 2022 06:05 AM
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு மூலம் மின்சார மானியம் பெற நிபந்தனை விதிக்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என பல இன்னல்களுக்கு திமுக அரசால் ஆளாக்கப்பட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியதோடு, திடீரென்று ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் இணையதளம் மற்றும் அலுவலகங்களில் மென்பொருள் மாற்றத்தை திமுக அரசு ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பெரும்பாலான மின் நுகர்வோர்கள் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, மின் கட்டண மையங்களில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மட்டும் மின் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
தற்போது மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான பணி தொடங்கி 10 நாட்கள் முடிவடைவதற்குள் ஆதார் எண்ணை சேர்த்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று கூறியிருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். மின் வாரியத்தின் இந்த நடவடிக்கை, மின்சார மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாகும் என்றே அனைத்துத் தரப்பினரும் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டில் சில வீடுகள் இறந்தவர்களின் பெயர்களில் உள்ளதால் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்குள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. சில வீட்டின்உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிப்பதில்லை. சில வாடகைதாரர்கள் தங்கள் ஆதார்எண்ணை இணைக்க விரும்பவில்லை. மொத்தத்தில், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை செலுத்துவதில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். ஆதார் எண் இணைப்புக்கான காலஅவகாசத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT