

வைகை அணை பூங்காவில் உள்ள சுற்றுலா ரயிலை புதுப்பித்து இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் அமைந்துள்ள பூங்காவில் ஊஞ்சல், சுற்றுலா ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்த பூங்காவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பூங்காவுக்குள் இயக்கப்படும் சிறுவர் சிறுமிகளை மிகவும் கவர்ந்த சுற்றுலா ரயில் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறியதாவது: 50 பேர் அமரும் வகையில் 6 பெட்டிகள் கொண்ட சுற்றுலா ரயில் டீசல் இன்ஜின் மூலம் வைகை அணை பூங்காவில் இயக்கப்பட்டது. அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் பயணம் செய்ய சிறியவர்களுக்கு ரூ. 3-ம், பெரியவர்களுக்கு ரூ.6-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த ரயில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ரயில் இயக்கப்படுவதில்லை, இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதற்கிடையே இந்த ரயிலை முறையாக பராமரிக்காததால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் சென்றபோது திடீரென ஒரு பெட்டியின் சக்கரம் கழன்று ஓடியது. இதில், அந்த பெட்டி தடம்புரண்டது. 6 பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து பழுதடைந்த பெட்டியை கழற்றிவிட்டு, மீதமுள்ள 5 பெட்டிகளுடன் தற்போது ரயில் இயக்கப்படுகிறது. இந்த பெட்டிகளும் எந்த நேரத்தில் தடம் புரளுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே, அசம்பாவிதம் நிகழாத வகையில் ரயில் பெட்டிகளை புதுப்பித்து, கூடுதல் பெட்டிகளை இணைக்க பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “சுற்றுலா பயணிகளின் கோரிக்கை குறித்து பொதுப்பணித் துறை, சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு கடிதம் எழுத உள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் சுற்றுலா ரயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.