

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆற்று மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் கனகராஜ், டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டார்.
தமிழக ஆறுகளில் நீராதாரம், குடிநீர் மற்றும் பாசனத் தேவை, சுற்றுச் சூழல் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் மணல் அள்ளப்படுவதும், அதைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மிரட்டப்படுவதும் சில நேரங்களில் கொலை செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
பல இடங்களில் மாவட்ட அதிகாரிகளைவிட பலம் படைத்தவர்களாக மணல் கொள்ளையர்கள் மாறி உள்ளனர். இது கடந்த திமுக ஆட்சிக் காலத்தைப்போல் தற்போதும் தொடர்கிறது என்று அறிக்கையில் ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இதற்காக அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கை தொடுத்துள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்பதை கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.