6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு | மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லை: வைகோ குற்றச்சாட்டு

வைகோ | கோப்புப்படம்
வைகோ | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, மத்திய அரசுக்குக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் பிரபாகரன் 68-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று ஆளுநரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், "அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாவையாக, ஊதுகுழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் அரங்கேறிய இந்த தினத்தில், அவர் பேசுவதெல்லாம் பொய், சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். அவர் தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்" என்றார்.

மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. இப்படி எத்தனையோ பேர் முயற்சி செய்து தோற்றுப்போயுள்ளனர்" என்று அவர் கூறினார்.

வரும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்படுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "பாஜக ரொம்ப நாளாக அப்படித்தான் நினைக்கிறது. கடந்த தேர்தலிலும் இப்படித்தான் சொன்னார்கள். அதெல்லாம் நடக்காது. இதே திமுக தலைமையிலான அரசுதான் நீடிக்கும், திமுக தலைமையிலான அணிதான் வெற்றிபெறும்" என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "அது பச்சைத்துரோகம். 32 ஆண்டுகள் எந்த குற்றமும் செய்யாமல், சிறையிலேயே வாடிய அவர்களது விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in