சென்னை மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை: நாளை பயன்பாட்டுக்கு வருகிறது 

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை
மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நாளை (நவ.27) திறந்து வைக்கப்படவுள்ளது.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது.

இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் பின்பு மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் நாளை (நவ.27) இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வருகிறது. நாளை மாலை நடக்கும் நிகழ்ச்சியில் இந்த பாதை மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு பாதையை பயன்படுத்த ஏதுவாக இந்த பாதை திறந்து வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்து இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in