Published : 26 Nov 2022 05:50 AM
Last Updated : 26 Nov 2022 05:50 AM

ராமேசுவரம் - காசிக்கு ஆன்மிகப் பயணம் - மூத்த குடிமக்கள் 200 பேரை அழைத்துச் செல்கிறது தமிழக அரசு

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 60-70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் 200 பேர் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிப்ரவரியில் 3 கட்டங்களாக ரயிலில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களுக்கு புனித யாத்திரை செல்பவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில், மானசரோவர் செல்லும் 500 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம், முக்திநாத் செல்லும் 500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், காசி, ராமேசுவரம் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள சரியான வழிகாட்டுதல் இல்லை என பலரும் அரசுக்கு தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை கடந்த 18-ம் தேதி ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விசுவநாதர் கோயிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், இதற்கான மொத்த செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தது. இதற்கான விண்ணப்பத்தை டிச.15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்துக்கு தற்போது பலரும் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த பயணத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்து மதத்தைச் சார்ந்தவராக, 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக, இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மேல் இருக்க கூடாது. இதற்கான ஆதாரங்களுடன், ஆதார் எண், அரசு மருத்துவரின் உடல் தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆன்மிகப் பயணம் 10 நாட்கள் கொண்டது. விண்ணப்பதாரர்கள் அதற்கேற்ப போதிய உடல் தகுதி உள்ளவராக இருத்தல் அவசியம். கட்டாயம் தமிழகத்தை சேர்ந்தவராக, இந்து மதத்தவராக, இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை. தேர்வு செய்யப்படும் 200 பேரும் ஒரே பயணமாக அல்லாமல், குலுக்கல் முறையில் பிரித்து 3 கட்டமாக பிரித்து அழைத்துச் செல்லப்படுவர்.

பயணம் மேற்கொள்ளும் அனைவரும் முதியவர்கள் என்பதால், உடன் இருந்து கவனித்து அழைத்துச் செல்ல 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களை வரும் 2023 பிப்ரவரி மாதத்தில் ரயில் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். காசியில் உள்ள முக்கிய புனித தலங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x