

சென்னை: தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.11,185.82 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று,மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: மத்திய அரசு தொடர்ந்து செஸ் மற்றும் கூடுதல் வரியை உயர்த்தி வருகிறது. இது நிதிக் கூட்டாட்சிக்கு எதிராக உள்ளதால், மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மத்திய அரசு அடிப்படை வரி விகிதத்துடன் செஸ் மற்றும் கூடுதல் வரியை இணைத்து, மாநிலங்கள் போதிய வரிப் பங்கீட்டைப் பெற வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு, தமிழகத்துக்கு அதிக நிதிப் பங்கை வழங்க வேண்டும்.
கரோனா பரவல் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டு நிலுவையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான காலவரம்பை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.
இதுதவிர, தமிழகத்தில் குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கு, 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த ரூ.2,200 கோடியை நிபந்தனைகளின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், 15-வது நிதி ஆணையம் சென்னை வெள்ளத் துயர் தணிப்பு பணிக்காக ரூ.500 கோடியை வழங்கப் பரிந்துரைத்தது. 2 ஆண்டுகளான பின்னரும் நிதி விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்க வேண்டும்.
நகர்ப்புறம், கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பை உயர்த்தவேண்டும். முதியோர் ஓய்வூதியம், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகளுக்கு மத்திய அரசின் பங்கை உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்காக தலா 50 சதவீதத்துக்கு ஒப்புதல் அளிப்பதுடன், மத்திய பட்ஜெட்டிலும் அதற்கு வழிவகை செய்ய வேண்டும். ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை வழங்குவதுடன், போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.