

நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும் வகையில் ஏணி-பாம்பு விளை யாட்டை உருவாக்கி, பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார் கோவையைச் சேர்ந்த ‘திருக்குறள் வழக்கறிஞர்’ எம்.ராஜாஷெரீப்(54).
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த இவர், வழக்கறிஞராகவும், உறுதிமொழி ஆணையராகவும் உள்ளார். பள்ளி, கல்லூரிகள், குடியிருப்போர் சங்கங்களுக்குச் சென்று, நுகர்வோர் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தொடர் பான விழிப்புணர்வுப் பிரச்சாரங் களை மேற்கொண்டுள்ளார். இரு கைகளாலும், இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இட மாகவும், தலைகீழாகவும் எழுதும் திறன் பெற்றவர்.
2006-ல் 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட தாளில் அரபு மொழியில் திருக்குரான் எழுதியுள்ளார். அதே அளவு தாளில் 2008-ல் திருக்குறளை எழுதி சாதனை படைத்த இவர், பனை ஓலையிலும் குறளை எழுதியுள்ளார். ஒரு கீ-செயினில் மாட்டும் அளவு கொண்ட மிகச் சிறிய நோட்டிலும் குறளை எழுதியுள்ளார்.
மேலும், திருக்குறளை வல மிருந்து இடமாகவும் எழுதி, அதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள், கூட்டங்களில் பேசும்போது குறளை மேற்கோள் காட்டிப் பேசும் இவரை ‘திருக்குறள் வழக்கறிஞர்’ என்றே அழைக்கின்றனர்.
பரமபதம் என்றழைக்கப்படும் ஏணி-பாம்பு விளையாட்டை, தமிழ், ஆங்கிலத்தில் நவீன முறையில் வடிவமைத்துள்ளார். 132 கட்டங்களில் ‘அதிகாலையில் எழுதல், இறைவணக்கம், உடற் பயிற்சி, கீழ்ப்படிதல், தன்னம்பிக்கை, காலம் தவறாமை, நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட நல்ல பண்புகள் மற்றும் பொய், தவறான நட்பு, கோபம், நம்பிக்கைத் துரோகம், திருட்டு, பேராசை, ஆணவம், ஜாதி, மத மோதல்கள்’ உள்ளிட்ட தீய பழக்கங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நல்ல பழக்கங்கள் கொண்ட கட்டத்துக்குச் செல்லும்போது ஏணியில் ஏறலாம். தீய பழக்கங்கள் கொண்ட கட்டத்துக்குச் செல்லும்போது பாம்பு தீண்டி, கீழே இறங்க வேண்டும். இவற்றைக் கடந்தால் பாரத ரத்னா விருது வாங்கிய நேரு, அன்னை தெரசா, அப்துல் கலாம், அம்பேத்கர், சச்சின் உள்ளிட்டோரின் படங்கள் உள்ள கட்டங்களை அடையலாம்.
இதுகுறித்து ராஜாஷெரீப் கூறும்போது, “மாணவர்களிடம் நல்ல பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக சுமார் 6 ஆயிரம் மாணவர் களுக்கு இதை இலவசமாக வழங்கி யுள்ளேன். மேலும், நண்பர்கள் உதவியுடன் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாகத் தரவும் திட்டமிட்டுள்ளேன். திருக் குறளில் உள்ள கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசெல் லும் வகையில், ஏணி-பாம்பு விளை யாட்டை உருவாக்கியுள்ளேன்’ என்றார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியானதிலிருந்து, அதில் வரும் கருத்துப்பேழை, பொக்கிஷம், தொழில் ரகசியம், வணிக வீதி கட்டுரைகளைச் சேகரித்து, பைண்ட் செய்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவித்து வருவதாகக் கூறுகிறார் ராஜாஷெரீப்.