

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக நுண்ணுயிர் பாசி பரவி கடல் பச்சையாக மாறுவது தொடர்ந்து வருகிறது.
நாக்டிலுகா சின்டிலான்ஸ் (Noctiluca scintillans) என்ற நுண்ணுயிர் பாசிப்படலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் முறையாக மண்டபம் மற்றும் கீழக்கரை கடல் பகுதியில் காணப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த பாசிப்படலம் பரவி கடல் பகுதி பச்சையாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடல் பச்சை நிறமாக காட்சியளித்தது. இதனை மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். பாசி படலத்தை ஆய்வு செய்த தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் கே.திரவியராஜ் கூறியதாவது: நுண்ணுயிர் பாசிப்படலம் காரணமாக ஏற்கனவே மண்டபம் மற்றும் கீழக்கரை பகுதியில் மீன்கள் செத்து ஒதுங்கின. தொடக்கத்தில் ஒரே பகுதியில் தான் இந்த பாசி பரவல் காணப்பட்டது. தற்போது மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதுமே ஆங்காங்கே காணப்படுகிறது.
இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த நுண்ணுயிர் பாசி பரவல் காணப்பட்டது. இந்தப் பாசி கடலில் உள்ள ஆக்சிஜனை அதிகளவில் எடுத்து விடுவதால், பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். ஒரு வாரத்துக்கு மேல் பாசிப்படலம் ஒரே இடத்தில் இருந்தால், அந்த பகுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடும்.
அதே நேரத்தில் அதிக காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ இந்த பாசிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் காணப்பட்டதைவிட நேற்று பாசிப்படலம் குறைந்துள்ளது. மேலும், இந்த பாசி படலம் காரணமாக மீன்கள் செத்து மிதந்தால், அவைகளை எடுத்து சாப்பிடக்கூடாது. அது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடும், இவ்வாறு அவர் கூறினார்.