

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு பஸ்கள் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் களுக்கு சென்று வர வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகையின் போது இயக்கப்படுகின்றன.
வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி போகி, 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் ஏற்கெனவே டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இதையடுத்து, பெரும்பாலான மக்கள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவிக்கும் சிறப்பு பஸ்களை நம்பியுள்ளனர்.
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாக போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த பொங்கல் பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 12,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வரும் பொங்கல் பண்டிகைக்கும் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளோம். சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை, முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றனர்.