Published : 26 Nov 2022 06:03 AM
Last Updated : 26 Nov 2022 06:03 AM

தி. மலை | ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என வீடியோ வெளியிட்ட இந்திரவனம் இளைஞர் மீது ஆட்சியர் பகிரங்க குற்றச்சாட்டு

இரா. தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இந்திரவனம் இளைஞர் மீது ஆட்சியர் பா.முருகேஷ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஊராட்சியில் ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்காமல் வீடுகள் முன்பு சிமென்ட் தூண் மட்டும் நடப்பட்டது என சமூக வலைதளத்தில் காட்சிகள் வெளியானது. இதனை, அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர் முரளி கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

ஆட்சியர் பா.முருகேஷின் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள், திட்ட பணி தொடங்கப்பட்டு ஓரிரு நாட்களாகிறது, குழாய் புதைக்கும் பணி விரைவாக முடிக்கப்படும் என்றனர். ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேநேரத்தில், தவறான தகவலை வெளியிட்ட இளைஞர் முரளிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார் மனு அளித்தனர். மேலும், பொய்யான செய்தியை பரப்பியதாக கூறி, இளைஞரை கைது செய்யக்கோரி ஊரக வளர்ச்சித் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஜல் ஜீவன் இயக்க மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது ஆட்சியர் முருகேஷ் பகிரங்க குற்றச் சாட்டை தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், “இந்திரவனம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் அமைக்காமல் இணைப்பு மட்டும் வைக்கப்பட்டதாக கடந்த 21-ம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அதில், ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கான தளவாடப் பொருட்கள், பணித் தளத்தில் கடந்த 19-ம் தேதி வைக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இப்பணி தொடர்பாக எவ்வித அளவீடுகளும் பதியவில்லை. பட்டியல் தொகை விடுவிக்கப்படவில்லை. கடந்த 22-ம் தேதி பணி தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.

இதற்கிடையில், இந்திரவனம் கிராமத்தில் வசிக்கும் முரளி கிருஷ்ணன் என்பவர் தவறான உள்நோக்கத்துடன் பணியை தொடங்குவதற்கு முன்பே, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருட்களை, ஒப்பந்ததாரர் அனுமதியின்றி எடுத்துள்ளார். சிமென்ட் தூண் மற்றும் அடித்தளத்துடன் கூடிய குழாய் இணைப்புகளை, சில வீடுகள் முன்பு பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். பின்னர், குடிநீர் குழாய் புதைக்காமல் இணைப்புகள் மட்டும் வழங்கப் பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோரது வாக்கு மூலத்தில் உறுதியாகிறது.

குடிநீர் குழாய் புதைக்காமல் இணைப்பு வழங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள். ஆனால், புகார் மற்றும் ஆட்டேசபனை தெரிவிக்கப்படவில்லை.

முரளிகிருஷ்ணன் என்ற தனி நபர் மட்டுமே, பொய்யான சூழலை ஏற்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ அனைத்தும் உண்மை தன்மை அற்றவை என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x