

தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த அவர், அங்கிருந்து காரில் ராஜாஜி அரங் கத்துக்கு வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த சசிகலாவின் தலையில் கை வைத்தும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட மோடியிடம் பேட்டி அளிக்கும்படி செய்தி யாளர்கள் கேட்டனர். ஆனால், வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு மோடி சென்றுவிட் டார். அவருடன் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஜெயலலிதா மறைந்த செய்தி கேட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்து வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவர் ஜெய லலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், மக்களவை உறுப் பினர்கள், சசிகலா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, முதல்வர் பன்னீர்செல்வத் திடம், ‘‘மத்திய அரசு எந்த நேரத்திலும், எத்தகைய உதவியையும் தமிழகத் துக்கு செய்யத் தயாராக உள்ளது. எந்தப் பிரச்சினை வந்தாலும், தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும்’’ என்று ஆறுதல் கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவு, தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கே பேரிழப்பு. அவரை தமிழக மக்கள் அனைவரும் தாயாக கருதி, அம்மா என்றே அழைத்து வந்துள்ளனர். அவரை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.