Last Updated : 26 Nov, 2022 11:28 AM

2  

Published : 26 Nov 2022 11:28 AM
Last Updated : 26 Nov 2022 11:28 AM

“பாஜகவை வளர்க்க அண்ணாமலை ஆக்டிவாக செயல்படுகிறார். ஆனால்...” - கடம்பூர் ராஜூ நேர்காணல்

கடம்பூர் ராஜூ

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அதிமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும், அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்தும், அதிமுக - பாஜக உறவு குறித்தும் நாம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்...

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ஆட்சியாளர்கள் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்கிறார்கள் என ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம் என்றும், நீதிமன்றத்தை நாடாதது ஏன் என்றும் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?

அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எத்தனை முறை ஆளுநரை சந்தித்திருக்கிறார். இந்த ஞானோதயம் அன்று அவர்களுக்கு எங்கே சென்றது? அவர்களும் நீதிமன்றம் சென்று இருக்கலாமே? அவர்கள் ஏன் ஆளுநரை சந்தித்து முறையிட்டார்கள்? அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்த்துக்கொண்டே, அவருக்கு கருப்புக்கொடி காட்டிக் கொண்டே அவரை சந்தித்து முறையீடும் செய்த இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்த கட்சி திமுக. தங்கம் தென்னரசு இதை மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

நீங்கள் நீதிமன்றம் செல்லாதது ஏன் என்ற கேள்வியில் லாஜிக் இருக்கிறதல்லவா? அதற்கு உங்கள் பதில் என்ன?

திமுக அரசுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு காலம் வரும். ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதில் அதிமுக படிப்படியாக செயல்படும்.

தமிழகத்தில் - சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி அதிமுக தரப்பில் ஆளுநரிடம் முறையிடப்பட்டிருக்கிறது. அதில், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த கோவை குண்டு வெடிப்பு குறித்தும், 4 மாதங்களுக்கு முன்பு நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி நிகழ்வு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏன் இந்த தாமதம்?

1998-ல் திமுக ஆட்சிக் காலத்தின்போது கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதை மீண்டும் அரங்கேற்றுவதைப் போல தற்போது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த குண்டு வெடிப்பு திட்டமிடாத ஒரு சூழலில் வெடித்துவிட்டது. இல்லையென்றால், 1998 குண்டுவெடிப்பைவிட மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதிமுக 34 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டிருக்கிறது. அப்போதெல்லாம் திவிரவாதம் என்பதே இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. ஆனால், இன்றைக்கு நடந்த சம்பவத்திற்கு ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. இதனை அதிமுக எப்படி பார்க்கிறது?

ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் ஆனித்தரமாக இருந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி அதிமுக. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்துவிட்டார்கள். கருணை அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடாக இருந்தது. மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்துதான் தமிழத்திற்குள் வருகிறது என்றும், இதற்கு தேசிய அளவில் தீர்வு தேவை என்றும் மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது. திமுகவின் இந்த கருத்து குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அதிமுக ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குக் கொண்டு வந்து போராட்டம் நடத்தியவர்கள் திமுகவினர். அப்போது அவர்கள் இவ்வாறு நினைக்கவில்லை. ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு; இல்லாதபோது ஒரு பேச்சு என்பதே திமுகவின் வாடிக்கை. தற்போது போதைப் பழக்கம் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள், மாணவிகள்கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதுபோன்ற நிலை முன்பு இல்லை.

தமிழக முதல்வரை பொம்மை முதல்வர் என்று விமர்சிக்கிறீர்கள். மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்வர் என்றால் தமிழக அரசை நடத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

இது உங்களுக்கும்கூட தெரியுமே. தமிழகத்தில் அமைச்சர்கள்கூட இன்றைக்கு முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. மதுரையில் இது அப்பட்டமாகவே வெளிப்பட்டு இருக்கிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமாகப் பேசி வருகிறார். இந்துக்களை ஆ.ராசா தரங்கெட்ட முறையில் பேசுகிறார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுகவை யார் கைப்பற்றுவது என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருப்பதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே கட்சியாகத்தான் அதிமுக இருக்கிறது. 66 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றோம். 62 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இருக்கிறோம். அதிமுகவில் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்ற பொதுக்குழு நடைபெற்றது. மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 2648 பேர். இவர்களில் 2532 பேர் பொதுக்குழுவில் பங்கேற்றார்கள். அந்த பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ்ஸும் வந்திருந்தார். அந்த பொதுக்குழுதான் அப்போது ஓ.பி.எஸ்ஸை நீக்கியது. அவர் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்பதுதான் உண்மை. அதுதான் செல்லும். இந்நிலையில், தற்போது ஓ.பி.எஸ் கூறி வருவது நடைமுறைக்குப் பொருந்தாது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு உள்ளது. தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக வருவார். எனவே, கட்சி ஒற்றுமையாகத்தான் இருக்கிறது.

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனுடன் நெருக்கம் காட்டுவது அவர்களது அணியை வலுப்படுத்தும் என்ற கருத்து உள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

எம்ஜிஆர் காலத்திலும்கூட சிலர் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். எஸ்டிஎஸ் தனிக்கட்சியே தொடங்கினார். இதேபோல், ஜெயலலிதா காலத்திலும் திருநாவுக்கரசர், பன்ரூட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் தனி அணியாக செயல்பட்டார்கள். ஆனால், அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. அதிமுக கட்டுக்கோப்பாகத்தான் இருந்தது. தற்போதும் அப்படித்தான்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்தார்கள். அத்தகைய ஆளுமை மிக்க தலைவராக எடப்பாடி பழனிசாமியை சொல்ல முடியுமா?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியை கொண்டு சென்றதே மகத்தான சாதனை. ஓபிஎஸ் பிரிந்து சென்று தனி அணியாக செயல்பட்டது, ஒக்கி புயல், வர்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், கொரோனா பெருந்தொற்று என பல சவால்கள் வந்த போதிலும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுமைத் திறன் இருந்ததால்தான் அவரால் இத்தகைய சவால்களை திறம்பட எதிர்கொள்ள முடிந்தது.

தமிழகத்திற்கு மிகப் பெரிய கடன் சுமையை முந்தைய அதிமுக ஆட்சி ஏற்படுத்திவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி இருப்பதற்கு உங்கள் பதில் என்ன?

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் 4 லட்சம் கோடி ரூபாய். மக்கள் நலத்திட்டங்களுக்காகவே இந்தக் கடன் வாங்கப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில் இரண்டே முக்கால் லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இதில் இருந்தே யாருக்கு நிர்வாகத்திறன் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி அதிமுக அல்ல... பாஜகதான் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

இது தவறான கருத்து. தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சி அதிமுகதான். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாஜகவை வளர்க்க ஆக்டிவாக செயல்படுகிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்று சொன்னால் அது அதிமுகதான். இன்றைக்கும் தமிழகத்தின் வலிமையான கட்சி அதிமுகதான்.

அதிமுக - பாஜக உறவு எப்படி இருக்கிறது?

உறவு நன்றாக இருக்கிறது. அதனால்தான் திண்டுக்கல் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி மதுரை வந்தபோது அங்கு சென்று எடப்பாடி பழனிசாமி அவரை வரவேற்றார்; வழி அனுப்பிவைத்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா?

2024-ல்தான் தேர்தல் வர இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுக்கும். கடைசி நேரத்தில்கூட கூட்டணி மாறலாம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி சேரலாம். ஏனெனில், திமுக ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். கூட்டணி குறித்த இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிய வாய்ப்பு இருக்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதிமுக - பாஜக கூட்டணி தற்போது இருக்கிறது. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எங்கள் கட்சியில் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. பொதுச் செயலாளர் என்ன முடிவு எடுத்தாலும் அதனை அதிமுகவினர் ஏற்பார்கள்.

கோவில்பட்டி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றிருக்கிறீரகள். தொகுதிக்கு நீங்கள் செய்த முக்கிய திட்டங்கள் குறித்து சொல்லுங்க?

கோவில்பட்டியில் குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. 25 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் என்பது இருந்து வந்தது. தற்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவந்து நாள்தோறும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். கோவில்பட்டியில் கலைக் கல்லூரியை கட்டி இருக்கிறோம். சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை உருவாக்கி இருக்கிறோம். கோவில்பட்டியின் மிக முக்கிய தொழில் தீப்பெட்டி தயாரிப்பது. இதற்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்கப்பட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சமீபத்தில்கூட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்து எனது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறேன்.

கடம்பூர் ராஜூ நேர்காணல் - வீடியோ வடிவில்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x