

சென்னை: “ஆதார் எண் இல்லாவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழக மின் வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இதற்கான பணியையும் தொடங்கியது. அதன்பின், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளதாக மின் நுகர்வோர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர், அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மின் கட்டணம் செலுத்துவதற்கு நவம்பர் 24 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கடைசி நாள். ஒரு நுகர்வோர் நவம்பர் 28-ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆதார் இணைப்பு தொடர்பாக இன்று (நவ.25) கோவையில் பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.