

சென்னை: சென்னை மாநகராட்சியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சார்ஜிங் நிலையங்கள் தொடர்பாக மாஸ்டர் பிளான் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வரும் காலங்களில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயரும், இதற்கு தேவையான சார்ஜிங் வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. விரைவில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே 2019-ம் ஆண்டு மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கொள்கை விரைவில் வெளியாக உள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
மின்சார வாகனங்கள்
சார்ஜிங் நிலையங்கள்
இவை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து மின்சார வாகனங்களுக்கான மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது.