Published : 17 Dec 2016 08:29 AM
Last Updated : 17 Dec 2016 08:29 AM

இயற்கை வளமும், மனித வளமும் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை: ரயில்வே அமைச்சர் கருத்து

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் 7-வது சர்வதேச அளவிலான பொருளாதாரக் கருத்தரங்கு கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

‘உலக அரங்கில் பொருளாதாரத்தின் தரத்தை முன்னேற்றுவதற்கான யுத்திகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, “டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, சர்வேதச அளவிலான கருத்தரங்கு நடத்துவது பாராட்டுக்குரியது.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் முதலீடு, கட்டமைப்பு, அறிவுசார்ந்த மனிதவளம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளமும், மனித வளமும் இன்றியமையாதவை” என்றார்.

பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். வணிக மேலாண்மைத் துறை டீன் யு.ஜெரினாபி வரவேற்றார். தான்சானியா நாட்டின் துணை தூதகர ஆணையர் ஹெச்.முகமது சிறப்புரையாற்றினார். சென்னை தொழில் வர்த்தகர் சபை பொதுச் செயலாளர் கே.சரஸ்வதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பிராமாவதி விஜயன், அவினாசிலிங்கம் மேலாண்மை தொழில்நுட்ப பயிலகத் தலைவர் பி.சித்ராமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சர்வதேச முதலீடு, கட்டமைப்பு வசதிகள், அறிவுசார் மூலதனம், பண மதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் விற்பனை வரி, இந்தியாவில் தற்போது முதலீடு செய்வதற்கான சூழல், தொழில்நுட்ப நகரங்கள், பொருளாதார மாற்றங்கள், மனிதவள மேம்பாடு குறித்து குழு விவாதங்கள், சிறப்புரைகள் நடைபெற்றன.

இதில், அமெரிக்கா, தான்சானியா, ஓமன், ஜெர்மனி, சீனா, பஹ்ரைன் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இந்திய தொழில் வர்த்தக சபையினர், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x