ஜெ. மறைவுக்கு நேரில் அஞ்சலி: குடியரசுத் தலைவர், பிரதமர், ராகுல் காந்திக்கு சசிகலா நன்றி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியமைக்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு சசிகலா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்து சென்றமைக்கு சசிகலா நன்றி தெரிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு நன்றி:
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள நன்றி கடிதத்தில், "விமானத்தில் கோளாறு ஏற்பட்டும்கூட மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் சென்னை வந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது" என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள நன்றிக் குறிப்பில், "விவரிக்க முடியாத துன்பத்தில் இருந்த எனக்கும், கோடானகோடி தமிழ் மக்களுக்கும் தங்களது வருகை பெரும் ஆறுதலாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள நன்றிக் குறிப்பில், "தங்களது அனுதாப வார்த்தைகள் என் துயரமான தருணத்தில் உணர்வுபூர்வமாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
