Published : 25 Nov 2022 08:08 AM
Last Updated : 25 Nov 2022 08:08 AM

திருச்சி சூர்யா, டெய்சி சரணிடம் திருப்பூரில் விசாரணை - சுமுகமாக பேசி பிரச்சினையை தீர்த்துக் கொண்டதாக இருவரும் அறிவிப்பு

திருப்பூரில் பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா.

திருப்பூர்: சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு வெளியான விவகாரம் தொடர்பாக திருச்சி சூர்யா, டெய்சி சரணிடம் திருப்பூர் பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் ஆகியோர் இடையேயான சர்ச்சைக்குரிய அலைபேசி ஆடியோபதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் விசாரித்து கட்சித் தலைமைக்கு 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான கனகசபாபதிக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அலைபேசி உரையாடல் குறித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் சிறுபான்மை அணித் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலபொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் நேற்று விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

கட்சியின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தனித்தனியாக விசாரணை நடந்தது. இது உட்கட்சி விவகாரம் என்று கூறி, பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநபர்கள் பாஜக அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 3 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணையின் அறிக்கை, தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோர் கூட்டாக, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை.

பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள். ‘கண்பட்டது போல்’ இந்த ஆடியோ சம்பவம் அரங்கேறிவிட்டது. தற்போது யாருடைய வற்புறுத்தலும் இன்றி பேசி முடித்துக் கொண்டோம்.

ஆடியோ வெளியானதால், இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்து, எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடித்துவிட்டோம். எங்கள் தரப்பில் ஆடியோ செல்லவில்லை. இது தொடர்பாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது. இதுதொடர்பாக கட்சியிலும் தெரிவித்து விட்டோம்.

குடும்பமாக பழகி வந்தோம்: நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அக்கா, தம்பியாக குடும்பமாக பழகி வந்தோம். இனி அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்னதொரு அசம்பாவிதம் தான். கே.டி.ராகவன் இன்று வரை கட்சிப் பணியை தொடரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி சூர்யா கூறும்போது, “கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மை இது. ஆனால் திமுக அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். திமுக எங்களை பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x