

தமிழகத்தில் வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு, சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் பயிர்கள், தென்னை சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை மதிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் சுமார் 22,877 சதுர கி.மீ. பரப்பளவுக்கு வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனை 26,345 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவு படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனத்தில் வசிக்கும் யானைகள், காட்டெ ருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, நீர் ஆதாரங்களுக்காக வனத்தில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இதுபோன்ற சமயங்களில் வனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் வசிக்கக்கூடிய மக்களின் வீடுகள், பொருட்கள், விவசாய பயிர்கள் வன விலங்குகளால் சேதப்படுத்தப் படுகிறது. மேலும், மனிதர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்படுவோ ருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு இணையாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று, வனவிலங் குகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வன விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், படுகாயம் அடைவோருக்கான தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.59,100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல கான்கிரீட், ஓட்டு வீடுகள் முழுவதும் பாதிக்கப் பட்டாலோ அல்லது கடும் சேதம் அடைந்தாலோ தலா ரூ.95,100, குடிசை வீடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம், கடுமையாக சேதமடைந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பயிர்கள் சேதம டைந்தால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், ஒரு தென்னை மரத்துக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.500 என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுமட்டுமின்றி, (பழைய இழப்பீட்டுத் தொகை அடைப்புக் குறிக்குள்) கறவை மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் (ரூ.10,000), காளை மாட்டுக்கு ரூ.25 ஆயிரம் (ரூ.10,000), வெள்ளாட்டுக்கு ரூ.3 ஆயிரம் (ரூ.2000), செம்மறி ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் (ரூ.1,500), கோழிக்கு ரூ.100 (ரூ.100), பன்றிக்கு ரூ.3 ஆயிரம் (ரூ.1000) என இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேதமடையும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரூ.2 ஆயிரம், வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம், கடைகளுக்கு ரூ.4 ஆயிரம், குடிநீர் கிணறு, மின்மோட்டாருக்கு ரூ.2 ஆயிரம் என பழைய மதிப்பீடே தற்போதும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குப் பின்னர்…
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 21.7.2016 அன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின் போது, வன விலங்குகள் தாக்குதலால் ஏற்படும் மனித உயிரிழப்பு, காயம், பயிர்சேதம், கால்நடை மற்றும் சொத்துகளின் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகை அதிகரித்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மேற்பார்வையிலான குழுவினர் இழப்பீட்டு தொகை மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்றனர்.