

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மறு சீரமைக்கவும், நிவாரணப் பணிகளுக்கும் ரூ.22,573 கோடி தேவைப்படுகிறது. முதல்கட்டமாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த 12-ம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறைக்காற்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்தப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.500 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படை யில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான குழு, ஓரிரு நாளில் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரை நேரில் சந்தித்து நிவாரணம் கோரு வதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று காலை 6.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வரின் செயலர்கள் சென்றனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பன்னீர்செல்வம், மாலை 5.10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு மோடியை சந்தித்து 25 நிமிடங்கள் பேசினார். அப்போது, புயல் நிவாரணம் கோரி மனு வழங்கினார். அதில், ‘புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.22,573 கோடி தேவைப்படுகிறது. முதல்கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுதவிர, தமிழக அமைச்ச ரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மறைந்த முதல்வர் ஜெயலலி தாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். அவரது வெண்கல திருவுருவச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் கடிதங்களையும் பிரதமரிடம் முதல்வர் வழங்கினார்.
புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழு அமைக்கப்பட்டுள்ளதற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தார். மேலும், தேசிய பேரிடர் நிதியில் இருந்து விரைவில் தேவையான நிதி மற்றும் இதர மத்திய திட்டங்களுக்கான நிதியை விடுவித்தால் மட்டுமே, தற்போது நடந்து வரும் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை தொடரமுடியும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்துக்கான 29 முக்கிய கோரிக்கைகள் கொண்ட 141 பக்க மனுவையும் பிரதமரிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குபடுத்தும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். கர்நாடகாவின் மேகதாது திட்டம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், நதிநீர் இணைப்பு, அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்குதல், அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மற்றும் தேசிய நீர் கொள்கை தொடர்பான சட்ட மசோதாவில் தமிழகத்தின் பரிந்துரைகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க வழி ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்பதுடன், ஆழ்கடல் மீன்பிடிப்பு சிறப்பு திட்டத்துக்கான நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
செய்யூர் அனல் மின்நிலைய திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழ கத்துக்கு விலக்களிக்க வேண்டும். கால்நடை மருத்துவ சேர்க்கைக்கான தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும். சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டால் நிதி வழங்கும் வகையில், தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கான விதிகள் திருத்தப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் அமல்படுத்தி யுள்ளது. இதனால், மாதம் ஒன்றுக்கு 85 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்ற விலையில் வழங்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் நேரடி மானியத்தை அமல்படுத்தக் கூடாது.
மெட்ரோ ரயில் அடுத்தகட்ட திட்டப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு கேபிள் டிவிக்கான ‘டிஜிட்டல்’ உரிமத்தை வழங்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத் தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். இந்த கோரிக் கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.