

கோவை: கோவை மாநகர காவல்துறை மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், ஸ்பார்க்லிங் ஸ்டார் ஆகியவை சார்பில் தலைக்கவசம் அணிவது மற்றும் போதைப் பழக்கம் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பெண்கள் மட்டும் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.
நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி கொடிசியாவில் நிறைவடைந்தது. இதில், 1,128 மாணவிகள் மற்றும் மகளிர் காவல்துறையினர் பங்கேற்றனர். அவர்கள் தலைக்கவசம் அணிந்தபடியே இரு சக்கர வாகனத்தில் பங்கேற்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கொடிசியாவில் நடந்த நிறைவு விழாவில் ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ பிரதிநிதி கவிதா ஜெயின் பங்கேற்று புதிய ஆசிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கான சான்றிதழை அவர் வழங்க காவல் ஆணையர் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்கு காவல்துறையினரால் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பெண்களின் பாதுகாப்புக்கு இவ்விரண்டு நோக்கங்களும் மிக முக்கியம். தற்போது, அதிகப்படியான பெண்கள் பணிக்குச் சென்று வருகின்றனர். சாலை போக்குவரத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்தும் அவர்களுக்குரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை. பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதற்கு இப்படிப்பட்ட விழிப்புணர்வு பேரணி அவசியமாக உள்ளது” என்றார். இந்நிகழ்வில், மாநகர காவல் துறையின் துணை ஆணையர் (போக்குவரத்து) அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.