Published : 25 Nov 2022 04:15 AM
Last Updated : 25 Nov 2022 04:15 AM

உதகையில் சாதி சான்றிதழ் கோரி பழங்குடி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உதகை: உதகை அருகே சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, பழங்குடி மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். உதகை அருகே உல்லத்திஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலைவேடர் இனத்தை சார்ந்தபழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். சுமார் 3,000 பேர் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடக்க காலத்தில், இவர்களுக்கு இந்து மலைவேடர் என்ற சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்து மலைவேடர் பழங்குடியினர் என்ற சாதி சான்றிதழ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தும் வேலையில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், நேற்று வகுப்பை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு பழங்குடியின சான்றிதழை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மலைவேடர் மக்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மானுடவியலாளர் குழுவினரின் பரிந்துரைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

உதகையில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று வழங்கும் காலதாமதத்தை தவிர்க்க, 14 மானுடவியலாளர்கள் நியமிக்கப்பட்டு, 3000 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது என்று நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x