Published : 09 Dec 2016 02:20 PM
Last Updated : 09 Dec 2016 02:20 PM

காவிரி வழக்கில் தமிழக உரிமைக்கு வெற்றி: அன்புமணி

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தமிழகத்தின் உரிமைக்கு கிடைத்த வெற்றி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. காவிரிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உதவும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றன. மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாத சூழலில், காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணையிடக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இவ்வழக்குகளில் பலமுறை தமிழகத்துக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிகாரம் குறித்து இதுவரை கேள்வி எழுப்பாத மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை; அதனால் அதுகுறித்த வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்று கூறியது.

இதையடுத்து நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டா? என்ற வினா குறித்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

அந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது. 1956-ஆம் ஆண்டின் நதிநீர் பிரச்சினைகள் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262(2)ஆவது பிரிவு ஆகியவை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதை தடை செய்வதாக மத்திய அரசின் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், எந்த ஒரு விஷயத்திலும் மக்கள் நலன் கருதி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் 136ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதை சாதாரணமான நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இது பொதுவாக மாநிலங்களின் உரிமைக்கும், குறிப்பாக தமிழகத்தின் உரிமைக்கும் கிடைத்த வெற்றியாகும். நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக ஏராளமான மேல்முறையீடுகள் பல்வேறு காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ள போதிலும், அப்போதெல்லாம் அவற்றை எதிர்க்காத மத்திய அரசு, இப்போது திடீரென எதிர்ப்பதற்கு காரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்பது தான். காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தது என்பதிலிருந்தே இதை உணரலாம்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, கர்நாடகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, அத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அம்மாநிலத்துக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற எண்ணம் தமிழக மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.

இன்றையத் தீர்ப்பைத் தொடர்ந்து வரும் 15-ஆம் தேதி பிற்பகல் முதல் காவிரிப் பிரச்சினை குறித்த வழக்குகளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. அதன் இறுதியில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆணையிடலாம். அதை வேறு வழியின்றி மத்திய அரசு நிறைவேற்றலாம். இவை அனைத்தும் சட்டப்படியும், நீதிமன்ற ஆணைப்படியும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள்.

ஆனால், தார்மீக நெறிமுறைகளின்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 20-ஆம் தேதியும், அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ஆம் தேதியும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தான், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்டத்தின்படி இல்லாவிட்டாலும், தார்மீக நெறிப்படி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உயிர்பெறுகிறது. எனவே, அத்தீர்ப்பையும், தார்மீக நெறிகளையும் மதித்து காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x