

சென்னை: கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு,கேக் வகைகளை தயாரித்து, விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ‘ஆவின்’ நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகள், மிக்ஸர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது. இதன்மூலம், ரூ.116 கோடி வருவாய் கிடைத்தது. 2023 பொங்கல் பண்டிகைக்குள் ரூ.200 கோடி வருவாய் ஈட்ட ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கேக் வகைகளைதயாரித்து, விற்பது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கப் கேக் மட்டுமின்றி, அரை கிலோ, ஒரு கிலோ அளவில் கேக் தயாரிப்பது, பல்வேறு சுவைகளில் கேக் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் கூறியபோது, ‘‘கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஆவின் கேக்வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதன்பேரில், கேக் தயாரித்து, விற்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றார்.