Published : 25 Nov 2022 04:05 AM
Last Updated : 25 Nov 2022 04:05 AM
ராமேசுவரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச்சிலிருந்து இலங்கை தமிழர்கள் 209 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வண்ணேரி பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி (34), அவரது மனைவி ரஜிந்தி (29), மகள்கள் கஜானா (13), டயானா (11), மகன் சாய்ஷன் (6) ஆகியோர் தனுஷ்கோடி அருகே உள்ள முதலாம் மணல் தீடையில் நேற்று அதிகாலை வந்திறங்கினர்.
அவர்களை மண்டபம் மெரைன் போலீஸார் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள முதல் தீடையில் வந்திறங்கியதாகவும், தங்களை படகில் அழைத்து வந்தவர்களுக்கு இலங்கை ரூபாய் 2 லட்சம் அளித்ததாகவும் கணேசமூர்த்தி தெரிவித்தார். அதன் பின்பு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT