

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை அதன் பராம்பரியம் கெடாமல் பாதுகாக்க அறநிலையத்துறை விதிகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக இன்று அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் பழமையான கோயில்களை பராமரிக்க தமிழக அரசு தகுதியான நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க யு னெஸ்கோவின் பரிந்துரை களையும் ஏற்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த 13 புராதன கோயில்களை ஆகம விதிகள் மாறாமல் புனரமைக்க அனுபவமிக்க தொல்லியல் துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையரான வீர சண்முகமணி தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் 13 பழமையான கோயில்களை ஆகம விதிகள்படி புனரமைத்து பராமரிக்க தமிழக அரசு தகுதியான நிபுணர்கள் குழுவை ஏற்கெனவே அமைத்துள்ளது. தொல்லியல் துறை பரிந்துரைகளை ஏற்று ஆகம விதிகளின்படி அவசர தேவைகளை சரிசெய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே போதுமான குழுக்களை அமைத்துள்ளோம் என்பதால் அறநிலையத்துறையின் விதிகளை மீறி புதிதாக வேறு எந்த குழுவையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இதுதொடர்பாக புதிதாக குழுவை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த பதில் மனுவால் கோப மடைந்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களை அதன் பாரம்பரியம் கெடாமல் பாதுகாக்க ஏன் இந்து சமய அறநிலையத்துறை விதிகளை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.