நொய்யல் இன்று 4: திருப்பூர் துயரம் திரும்பவும் வருமா?

நொய்யல் இன்று 4: திருப்பூர் துயரம் திரும்பவும் வருமா?
Updated on
3 min read

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

*

ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஆகியவை திருப்பூர் தாராபுரம் சாலையில் நொய்யலின் கிளையாகச் செல்லும் நீரோடைகள். இவற்றின் கரையோரங்களில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் நிறுவனங்கள், சாய, சலவைப் பட்டறைகள் உள்ளன. இப்பகுதியில் 2011 நவம்பர் 6-ம் தேதி நள்ளிரவு வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வீட்டின் கூரைகளில் தஞ்சம் புகுந்தனர் மக்கள். அன்றிரவு பெய்த பெரு மழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள், பனியன் நிறுவனங்களில் புகுந்தது வெள்ளமா, சாக்கடையாக, ரசாசயனக் கழிவுநீரா என்று தெரியாத அளவுக்கு, கரிய நிறத்திலான நீர் 20 அடி உயரத்துக்கு நுரைத்துப் பொங்கியது.

நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த கூரை வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. மேலும், 100 பேருக்கு மேல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 20 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடிழந்து, தெருவுக்கு வந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், உடமைகளைப் பாதுகாப்பதில், உணவுப் பொருட்கள் வழங்குவதில் அதிகாரிகள் அக்கறை காட்டாததால், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள், அதிரடிப்படையினர் வந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டனர்.

இதுகுறித்து இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போர் கூறும்போது, “இப்படியொரு வெள்ளத்தை இங்கே பார்த்ததே இல்லை. ஆற்றின் கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில், பனியன் நிறுவனங்களில் ஆள் உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது என்றால் ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று அர்த்தம்” என்றனர்.

சங்கிலிப்பள்ளம் ஓடை நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிமுகத்துவார பகுதி குறுகலாக மாறிவிட்டது. திருப்பூருக்கு மேற்குப் பகுதியில், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஊர்களின் வழியாக வரும் சிற்றோடையும், சின்னக்கரை என்ற கிராமத்தின் வழியாக வரும் ஓடையும் ஓரிடத்தில் இணைந்து, இங்கு கல்லூரி அருகேயுள்ள குளத்தில் சங்கமிக்கிறது.

திருப்பூருக்கு தெற்குப் பகுதியாக விளங்கும் வீரபாண்டி பிரிவு முதல் வடக்கு நோக்கி வரும் தண்ணீரும், இதே கல்லூரி வழியாக வந்து அதே குளத்தில் கலக்கிறது. 67 ஏக்கர் பரப்புகொண்ட உள்ள அந்தக் குளம் நிறையும்போது, திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகேயுள்ள மடை வழியாக, உபரிநீர் வெளியேறி, ஜம்மனை ஓடை வழியாக நொய்யலில் கலக்க வேண்டும்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் குளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகின. குறிப்பாக, இங்குள்ள பூம்புகார் நகர் பெரிய நகரமாகவே மாறிவிட்டது. குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஜம்மனை ஓடைக்குள்ளும் ஆயிரக்கணக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள் உருவாகின.

60 சதவீத ஓடை ஆக்கிரமிப்பு

அந்த வகையில் ஓடைப்பகுதி மட்டும் 60 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டது. அவை ஓட்டு வீடுகளாகவும், குடிசை வீடுகளாகவும் மாறின.

1978-ம் ஆண்டுக்குப் பிறகு நொய்யலிலும், அது சார்ந்த ஓடைகளிலும் நீர்வரத்து குறைந்தது. எனவே, நொய்யல் என்றொரு நதியும், ஜம்மனை ஓடை என்றொரு காட்டாறும் உண்டு என்பதையே மறந்து, இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். அதேசமயம், கல்லூரி அருகே உள்ள குளத்தில் சாயப் பட்டறைகளின் கழிவுநீர் தேங்கியது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் நலன் கருதி மடையும் உடைக்கப்பட்டது. குளத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், ஓடை காணாமல்போனதுடன், தண்ணீர் தேங்கிய குளமும் சிறுத்துப்போனது. குளத்தின் உபரிநீர் வெளியேறும் பகுதியும் மிகவும் குறுகியது.

இந்நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த கனமழையால், முருகம்பாளையம், கரைப்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பின. அவற்றிலிருந்து மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மழைநீர் குளத்துக்கு வந்தது.

பல பகுதிகளில் இருந்து வந்த வெள்ளம் சங்கமித்து சிறிய முகத் துவாரத்தில் வெளியேறியதால், ஜம்மனை ஓடையில் அதிக வேகத்துடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது; குடியிருப்புகள், வாகனங்கள், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் என அனைத்தையும் இழுத்துச் செல்லப்பட்டன. அதேநேரத்தில் அதிகப்படியான ஆக்கிரமிப்பால் முகத்துவாரப் பகுதி குறுகலாக மாறியிருந்ததாலும், சங்கிலிப் பள்ளம் ஓடையில் வந்த வெள்ளம், உடனடியாக ஆற்றில் சங்கமிக்க முடியாமல், சென்ற வேகத்தில் பின்வாங்கியது.

10 அடி உயரத்துக்கு வெள்ளம்

இதனால், அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்து, 10 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது. சங்கிலிப்பள்ளம் ஓடையின் முகத்துவாரப் பகுதியை அகலமாக பராமரித்து வந்திருந்தால், இந்த அளவுக்கு விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்காது.

சரி, இப்போது இந்தப்பகுதிகளில் என்ன நிலை? ஆக்கிரமிப்பு வீடுகள் நீர் நிலைகளின் இருபுறமும் மறுபடியும் உருவாகி விட்டன. 5 ஆண்டுகளுக்கு முன் 60 வீடுகள் இருந்த இடத்தில், தற்போது 100 வீடுகள் உருவாகிவிட்டன.

மேலும், மாநகராட்சி குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாகவும், நன்னீருக்கு பதில் கழிவுநீர் ஓடும் நீர் நிலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

தற்போது இங்குள்ள 3 நீர்நிலைகளில் மட்டும் 4 ஆயிரம் கட்டிட ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், இதில் 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களே தெரிவிக்கின்றனர்.

நீர் வழித்தடங்கள் முழுவதும் இன்னமும் மரங்கள் வளர்ந்தும், புதர்மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிடக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் 2011-ல் வந்ததுபோல இப்பகுதியில் வெள்ளம் வந்தால் என்ன நிலை?

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், நொய்யல் குறித்த குறும்படம் தயாரித்தவருமான கோவை சதாசிவம் கூறியது: சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில் மட்டுமின்றி, திருப்பூரில் நொய்யல் சார்ந்த குளங்கள், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், மீண்டும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

சாயப்பட்டறை கழிவுகளைக் கலக்கும் வகையில், நொய்யல் கரையோரம் மற்றும் அதன் நீர்வழித்தடங்களை ஓரமாக உள்ள நிலங்களை, பனியன் நிறுவன உரிமையாளர்கள் அதிக விலைகொடுத்து வாங்குகின்றனர்.

சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை, நகரத்து ராஜ வாய்க்கால், அல்லாலபுரம் குளம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. மேலும், கோழி, மாடு, பன்றி, மீன் இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 240 ஏக்கர் பரப்பு கொண்ட பூம்புகார் குளத்தில் தற்போது புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் இங்கு அமைய உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நீர்வழித் தடங்களை அழித்தால், ஒரு நாள் நதி எல்லாவற்றையும் அழிக்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் திருப்பூர் தப்பித்துள்ளது. இல்லாவிட்டால் 6 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை விட, தற்போது திருப்பூர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் என்றார்.

பயணிக்கும்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in