

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க அனுமதிக்கப்பட்டது. இப்பணியில் குடிநீர் குழாய் புதைக்கப்படாமல், வீடுகள் முன்பு சிமென்ட் கட்டை மட்டும் நடப்பட்டதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து, ஆட்சியர் பா.முருகேஷின் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், திட்டப்பணிகள் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது எனவும், குழாய் புதைக்கும் விரைவாக மேற்கொண்டு அனுமதிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையில், ‘சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய இளைஞர் முரளிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரேணுகோபால் புகார் அளித்துள்ளார். மேலும், முரளி கிருஷ்ணன் மீது உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் தனித்தனியே புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் தவறான செய்தி வெளியிட்ட முரளி கிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முரளி கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிடப்பட்டன.